தற்போது தேடப்பட்டு வரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியே, கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரின் போதைப்பொருட்களை நாடு முழுவதிலும் விநியோகத்துள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தப்பட்ட ஒவ்வொரு முறையும் சம்பத் மனம்பேரிக்கு ரூ. 600,000 முதல் 700,000 ரூபா வரை வழங்கப்பட்டதாக விசாரணையின் போது பெக்கோ சமன் தெரிவித்ததாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான சம்பத் மனம்பேரி, பொலிஸ் சீருடைகள் மற்றும் பொலிஸ் சின்னம் கொண்ட அங்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ஆடைகளை அணிந்துகொண்டு அவர் போதைப்பொருட்களை விநியோகித்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பத் மனம்பேரியின் சகோதரர், இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரி, தற்போது மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள நிலையில், தனது சகோதரரிடம் பல துப்பாக்கிகள் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியதாக சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
அத்துடன், மித்தெனியவில் புதைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களும் ஜனவரி 27 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து மித்தெனியவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்தெனியவில் கொள்கலன் போக்குவரத்து வாகனத்திலிருந்து இரண்டு கொள்கலன்களும் இறக்கப்பட்டபோது, பியல் மனம்பேரி மற்றும் சம்பத் மனம்பேரி ஆகிய இரு சகோதரர்களும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கும் தொடர்புடைய காணொளி காட்சிகள் கிடைத்துள்ளன.
அதேவேளை, இரண்டு கொள்கலன்களில் இருந்த அந்த வெள்ளைநிற பொருள் 20 பெரிய பைகளில் 40 பைகள் இருந்ததாகவும் அவற்றில் 06 பைகள் ஒரு லொரியில் ஏற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
குறித்த 06 பைகளும் நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதன், பின்னர் அவை நாட்டின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இறுதியாக, கடந்த ஓகஸ்ட் மாதம் கந்தானையில் உள்ள ஒரு வீட்டிற்கு வெள்ளைப் பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளதும் கண்டறிப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மித்தெனியவிலிருந்து நுவரெலியாவிற்கு இந்தப் பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட லொரியும் பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதோடு லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தடுப்பு காவலில் உள்ள பாதாள உலக குழு தலைவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தொடர்ந்து தீவிர சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.